Wednesday, September 14, 2011

முத்தம்


எனக்குள் நான் 
உன்னைப் பருகிக்கொள்ளவும்
உனக்குள் நீ 
என்னைப் பருகிக்கொள்ளவும்
கிடைத்திருக்கும்
மதுக்கோப்பை - முத்தம்!

******



அப்படித்தான்!
ம்...
அப்படியே
உறிஞ்சி
எனக்குள்ளிருக்கும் உன்னை
மேலெழுப்பு...
அவளுக்கும் ஒன்று தரவேண்டும்!!!

******



முத்தக் 
கணங்களில்
சிரிக்காதே...
மூச்சு திணறுகிறது காதல்!
மூர்க்கமாகிறது காமம்!

******


இதழ் ஒற்றி எடுப்பதாயிருந்தால்
நொடிக்கொன்று வேண்டும்...

நெடிய முத்தமென்றால்
நாம் பொம்மையாகும் வரை வேண்டுமெனக்கு!

******



ஆயிரமாவது முத்ததிற்குப் பிறகு
அவ்ளோதான் இன்னைக்கு - என 
சொன்னதில் விளைந்த 
மௌனத்தை உடைக்க
தற்செயலாய்

முத்தத்தின் சுவையென்ன
எனக்கேட்டாய் நீ...
சோதித்துப் பார்ப்போமா
எனக்கேட்டேன் நான்...
சிரிக்கத்துவங்கிவிட்டது காதல்!

******



நாணத்தோகை
களைந்துவிடு
கரும்பு சாப்பிடவேண்டுமெனக்கு!

******


காமம் தடவிய 
முத்தப் பண்டங்கள்
நமக்கு குழந்தைகள் செய்யும்...
காதல் மட்டும் ஊற்றிய 
முத்த பாணங்கள்
நம்மையே குழந்தைகளாக்கும்...

வா குழந்தைகளாவோம்!
******


Saturday, April 16, 2011

அடிக்கத்தூண்டிய அரவங்கள்-1



ஒழுகிய கூரையின்
ஓதம் காயா வீட்டில்
கோணிப்படுக்கைகளுக்கிடையே 
மலர்ந்திருந்தது ஒரு நாய்க்குடை!

அதனருகே...
இதழ் அவிழ்க்கத் துடிக்கும்
மொட்டு வெளிப்படுத்தும் அசைவுகள் போல
இமை திறக்க அசைவுருகிறாள்
பதின்வயதில் பாதி தொட்டிரா என் கதை நாயகி!

குண்டு விழுந்து
உடற்சிதறிச் செத்துப்போன அப்பாவும்,
முட்டைவிற்றுக் கிடைக்கும் காசில்
அரிசிச்சோறு சாப்பிடலாம் என 
என்றோ சொல்லியிருந்த அம்மாவும்,
முட்டையிடத் தயாரானக் கோழியும்
ப்ரக்ஞையில் அறைந்ததும்
விடுக்கென்று அவள் எழுகிறாள்...

தினம் தினம்
தின்று சலித்துப்போன 
உப்புக்களிச் சுவையை
மேற்பற்களால் சிரைத்தும்
பாவாடையால் துடைத்தும் 
நாக்கிலிருந்து விரட்ட அவள் முயற்சிக்கிறாள்...

ஒரு தவசியின் ஜெபம் போலவும்
ஒரு முனிவனின் சாபம் போலவும்
அவளின் சிந்தனையெல்லாம் அரிசிச்சோறாகவே இருக்கிறது...

பசித்து அழும்போது
அப்பனிடம் போகாமல்
அம்மையிடம் போகத்துடிக்கும் மழலையைப்போல
தாயைக்கூடத் தேடாமல்
அவள் கூடுநோக்கி விரைகிறாள்...

முன்தினம் பகைவர்கள் ஷெல் அடித்தபோது
பெரும் கூச்சலிட்டு ஓடியபோது 
கூட்டைத் திறந்துவிட்டது அவளுக்கு நினைவிலிருந்தது...

காடு மேடு
சுற்றித் திரிந்து
கழுகு கொத்தும் சில போர்ப் பிணங்கள் தாண்டி
அவள் அக்கொழியைக் காண்கிறாள்...

ஒரு பட்டுப்போன
புத்தரின் பின் மறைந்திருந்து
கோழியிடப்போகும் முட்டைக்காக
அவள் காத்திருக்கிறாள்...
கோழியின் பின்பகுதி
அவளுக்கு நெல்வயலாகக் காட்சிதருகிறது...

காசுவிழும் சத்தம் கேட்பதற்காக
மௌனித்துக் காத்திருக்கும்
குருட்டுப்பிச்சைக்காரனைப்போல 
அவள் காத்திருக்கிறாள்...

தவம் செய்யும் பக்தனுக்கு 
தாமதமாக காட்சிதரும் கடவுளைப்போல
தாமதமாகவே முட்டையிட்டது அக்கோழி...

தாயின் தனத்தை
ஆர்வமாகப் பிடித்து பாலுண்ணும் சேய் போல
அவள் அம்முட்டயைப் பிடித்திருக்கிறாள்...

எங்கோ விழுந்த குண்டுச்சத்தத்தில்
பிடி நழுவி
முட்டையின் மஞ்சள் ரத்தம்
நிலம் பரவியதும்
அவள் அழுதுகொண்டே வீடு நோக்கி ஓடுகிறாள்...

அங்கே அந்த இளம் தமிழச்சியின்
இன எதிரிகள் சிலபேர்
அவளின் அம்மாவை வைத்து
இனக்கலப்பு செய்துகொண்டிருந்தர்கள்...

பின்பு ஒருநாள் அவள் பெண்புலியானாள்!


Friday, March 11, 2011

ஒரு வியாபாரியும் அவரின் பெருமூச்சும்


நரைத்திருந்த தாடியிலும்
நலங்கெட்டக் கண்களிலும்
இளைத்தக் கன்னங்களிலும்
லேசாய் பருத்து
லேசாய் வளைந்திருந்த முதுகிலும்
வண்டியிழுக்கையில் வெளிப்படும்
வைக்கோல் நரம்புகளிலும்
ஒட்டியிருந்தது அவரின் முதுமை...


கிளம்பிவிட்ட பேருந்தின்
ஒரு ஜன்னலுக்கு
திடிரென முளைத்திருந்த
கரத்தினைக் கண்டதும்,


தனை விடுத்து எங்கோ செல்லும்
தாயின்பின்னோடும் மழலையைப் போல

கூம்புக் காகிதத்தில் 
சுவைபொருள் நிரப்பி
கால்களில் இளமை சுரந்து

அவசரமெடுத்து
ஜன்னல் அடைந்து
பண்டம் கொடுத்து
அவ்வேகத்தில் பேரமும் கடந்து
கிடைத்ததை அடைந்து
கல்லாவில் போட்டதும்
அவரிடமிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு என்னிடம் சொன்னது...


அவருக்குச் சாதிக்காத
ஒரு மகனிருக்கிறான் என்று!


இல்லையில்லை


சாதித்த மகன்
கைவிட்டுவிட்டான் என்று!


இல்லையில்லை

அவருக்கு திருமண
வயதில் ஒரு மகளிருக்கிறாள் என்று!

இல்லையில்லை

அவரின் மகளின் குழந்தைக்கு
ஒரு பொம்மை பரிசளிக்க என்று!

இல்லையில்லை

அவரின் மனைவிக்கு 
அடுத்தநாள் பண்டிகைக்கு
ஒரு புடவை வாங்கித்தர என்று!


இல்லையில்லை


இறந்துவிட்ட மனைவியின் படத்திற்கு 
ஒரு சந்தன மாலை அணிவிப்பதற்கு என்று!

இல்லையில்லை

அவர் யாருக்கும் 
அடிமையாக இருக்கவில்லை என்று!


இல்லையில்லை


அவர் யாரன்பிற்கோ
அடிமையாக இருக்கிறார் என்று!


இல்லையில்லை

அவருக்கு அன்றிரவின்
சாராயத்திற்குப் பணமில்லை என்று!


இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!!
அதுகணம் எனை நோக்கிய
அவரின் தீர்க்கமானப் பார்வை சொன்னது
அவருக்கு அதுதான் தொழில் என்று!!!


Thursday, November 25, 2010

நானிங்கு சுகமில்லை... நீ???





வாய் நிறைத்த இரையோடு
வெறும் கூட்டை வந்துசேரும்
தாய்க்குருவிக்குத் தொற்றிக்கொள்ளும்
பதற்றம் போல் இப்போது 
நீ பிரிந்த எனக்கும்!
நானிங்கு சுகமில்லை... நீ???


கடற்தொலைத்த மோதிரத்தை
அலைமூழ்கி மணலெடுத்து
அது அகப்படும் கைப்பிடிக்காய் 
மூழ்கி மூழ்கிக் கண்சிவப்பது போல் இப்போது
உனை தொலைத்த நானும்!!
நானிங்கு சுகமில்லை... நீ???


உன் கரம் கோர்க்கா பயணங்களில்
நெருஞ்சிமுள் செருப்புகள்!
உன் கைபடா புசித்தலில்
கொடுந்தேளின் விஷம்!!
உன் உரசலில்லா இரவுகளில்
உருக்கிரும்பின் மெய்வருடல்!!!
உன் பாத்திரமில்லா கனவுகளில் 
நிழல் விழா மானுடர்கள்!!!
நானிங்கு சுகமில்லை... நீ???



நினைவிருக்கிறதா தேவி!
என் நடப்பு அகவையின் முதல் நாளில் 
உனக்கென்ன வேண்டும் எனக்கேட்டாய்.
உடனே நான்
இனிவரும் யுகங்கள் முழுக்க
உன் இதழ் பட வாழ்தல் வேண்டுமென்றேன்!
ஒரு கணம் நீ சொக்கிப்போய் 
என் விழி ஊடுருவி சம்மதம் சொல்லிவிட்டு
உடனே தெளிவடைந்தவளாய் வெட்கி 
என் புறங்கையில் மழைபொழிந்துவிட்டு
திருமணம் வரை இசை பட வாழ் என்றாய்!

நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்
உன் சிரிப்பில்லை
உன் அதட்டலில்லை
உன் பரிகாசமில்லை
உன் திட்டலில்லை
உன் உரசலில்லை
உன் எச்சிலில்லை
உனை பிரியும் நேரங்களில்
வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்?


அறிவாய் என் நாயகி!
நீயென் உப்பு!
நீயென் குருதி!
நீயென் நீர்!
நீயென் சத்து!
நீயென் ஊழ்!
உன் பிரிவு எனக்கு அமிலக்குளியல்!!!


தேவி உன் பிரிவில்
தொங்கும் வௌவாலின் 
தலைகீழ் கோணமாய்
மாறிவிட்டதடி என் உலகம்!


சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி 
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ??? 



[கிரியாயூக்கி சிவாஜி சங்கருக்கு(http://sivajisiragukal.blogspot.com/) சமர்ப்பணம்]


Friday, August 27, 2010

ஜல்லிக்கட்டு





தோல்வியெனில்
ஒரு திமிரலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!!


வெற்றியெனில்
திமில் பிடித்தலுக்கும்,
மண்டியிடச்செய்தலுக்கும் அல்லது எல்லைக்கோடு அடைதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் பயணம்
எம் களம்!!!


களமாடிக் களைக்கும்போது
கூட்டத்தின் கூச்சல்கள்
எமக்கு உற்சாகம்...
காளைக்கு மிரட்சி...


வாடிவாசல் புறப்படும்
கொம்பு சீவிய
குடிகார காளையை
வால்பிடித்தோ இல்லை திமில்பிடித்தோ
தூக்கியெறியப்படும் வேளைகளில்
பரணிலிருக்கும் காளைக்காரனின்
வெடிச்சிரிப்பிலும் மீசை முறுக்களிலும்
வெளிப்படும் அவன் வெற்றி...

மாறாக
பற்கள் கடித்தலிலும் கொச்சயாய் ஏசுதலிலும்
வெளிப்படும் எம் வெற்றி...


பாவம் காளைகள்
மீசை முறுக்கலில் அதற்கு வெற்றியுமில்லை...
கொச்சை வார்த்தை ஏசலில் தோல்வியுமில்லை..


இக்கதி முடிவில்
யாம் பெற்ற சன்மானம்
இரண்டாயிரம் ரூபாய்...


கோடித்துணி
வாய்க்கரிசி
மேலும் சில சேர்த்து
எம் மாமன்
எமக்கெனச் செய்த செலவு மூவாயிரம் ரூபாய்...!!!


Monday, August 9, 2010

உன் கனவு வருமெனில்...

*

கனவென்பது யாதெனில்
குவலையம்
என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!....


நிஜங்களுக்கு முரணாய்
நித்திரைத் திரைவெளியில் நீ
கதவுகள் இன்றி வருவாய்...
கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்...


கனவுகளில் நீயோர் விழிவிழுங்கி!!!
விழுங்கி என்னை புழுங்கச் செய்வாய்...
புருவங்களை வில்களாக்குவாய்...
விழிக் கதிர்களின்
வீரியம் கூட்டிக் கூட்டி அம்புகள் செய்வாய்...
அம்புகளினுடே இறங்கி அகப்பூ அதிர ஆட்டமும் போடுவாய்....


இப்போது தண்டவாலங்களைவிட அதிகமாய் தடதடக்கும் இதயம்!!!!


கனவுகளில் நீயோர் மந்திர பிரம்மம்!
மந்தாட்சம் விளைவித்த மந்தமாருதம் ஊதி
பூவாசனுக்கு பூக்களின் நிறம் சிருஷ்டிப்பாய்...
புவனக்காதலரெல்லாம் தூது பரிமாற
புட்களுக்கெல்லாம் பேசுதிறன் கற்பிப்பாய்...


காதலில் மட்டும் எண்ண அலைகள் கட்டுக்குள் இருக்காது!
கனவுகளில் மட்டும் நிகழ்வதேதும் தொடர்ச்சியாய் இருக்காது!!!


கைகோர்த்து நடப்பாய்...
அடுத்தநொடியில்  இதழ்கள் சேர்த்து மெல்லக் காதலைக் கடப்பாய்...
அற்புதங்கள் நிகழ்த்திவிட்டு என் நித்திரையையும் துரத்திவிடுவாய்...


விடிகையில் அல்லது விழிக்கையில்
இதயம் துடிக்கும் இவ்வாறு என் கண்மணி!


"மீளா துயிலிலும்
உன் கனவு வருமெனில்
இப்போதே நான் தயார்"!!!...


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008075&format=html

Tuesday, June 1, 2010

கவிதைக் காரணங்கள்...

ஊடலின் வெப்பமும்
உள் விளைந்த
தனிமையின் மொத்தமும்
அன்றைய மழைக்காரணங்கள்...


வழக்கமாய்
ச்சோ! எனப் பெய்யும் மழை
அச்சச்சோ! எனப் பெய்வதாகவும்...


தழைகளினூடே
துளிகளைச் சிந்தி
தருக்கள் அழுவதாகவும்...


அதனினூடே
அவைகள்
அனுதாபிப்பதாகவும்
ஆறுதல் பட்டது மனது!!!


தேவ தேவி!
நின்
நினைப்பில் நனைவதைப்போலவே தொப்பலாய்
நனைந்துவிட்டேன் மழையிலும்...


குடைபிடித்து வானம் வருமா???
வரும்!!!
வந்தாய் நீ!!!


முற்றிலும் நனைந்த போதும்
இப்போது உன் குடை தேடியது மனது!!!


சூரியன் வருவதை
விரும்பாதிருக்காது வானம்...
ஏனோ
அம்முறை விரும்பவில்லை நீ!!!
ஆயினும்
வந்தே தீரும் சூரியன்!!!


குடைக்குள் நாம்!!!


அடுத்தடுத்த
உரசல்களில் உருவான
மின்சாரப் பாய்ச்சலில் நீயும்...
இதுவும்
ஊடல் விளைவிக்குமோ! என்ற
ஐயத்தில் நானும்...


பதைபதைத்துக்கொண்டே
பயணம் நீண்டது...


மகிழ்வுந்தோன்று தேரில் சேர் தெளித்ததும்
காற்று குடை கவர்ந்ததும்
மழை உன்னை திருமுழுக்கிட்டதும்
மின்னல் நம்மை பிணைத்திட்டதும்
உடனே ஊடல் விரட்டப்பட்டதும்
இக்கவிதை காரணங்கள்...




நன்றி யூத்புல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayaseelanpoem040610.asp