Friday, August 27, 2010

ஜல்லிக்கட்டு





தோல்வியெனில்
ஒரு திமிரலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!!


வெற்றியெனில்
திமில் பிடித்தலுக்கும்,
மண்டியிடச்செய்தலுக்கும் அல்லது எல்லைக்கோடு அடைதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் பயணம்
எம் களம்!!!


களமாடிக் களைக்கும்போது
கூட்டத்தின் கூச்சல்கள்
எமக்கு உற்சாகம்...
காளைக்கு மிரட்சி...


வாடிவாசல் புறப்படும்
கொம்பு சீவிய
குடிகார காளையை
வால்பிடித்தோ இல்லை திமில்பிடித்தோ
தூக்கியெறியப்படும் வேளைகளில்
பரணிலிருக்கும் காளைக்காரனின்
வெடிச்சிரிப்பிலும் மீசை முறுக்களிலும்
வெளிப்படும் அவன் வெற்றி...

மாறாக
பற்கள் கடித்தலிலும் கொச்சயாய் ஏசுதலிலும்
வெளிப்படும் எம் வெற்றி...


பாவம் காளைகள்
மீசை முறுக்கலில் அதற்கு வெற்றியுமில்லை...
கொச்சை வார்த்தை ஏசலில் தோல்வியுமில்லை..


இக்கதி முடிவில்
யாம் பெற்ற சன்மானம்
இரண்டாயிரம் ரூபாய்...


கோடித்துணி
வாய்க்கரிசி
மேலும் சில சேர்த்து
எம் மாமன்
எமக்கெனச் செய்த செலவு மூவாயிரம் ரூபாய்...!!!


Monday, August 9, 2010

உன் கனவு வருமெனில்...

*

கனவென்பது யாதெனில்
குவலையம்
என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!....


நிஜங்களுக்கு முரணாய்
நித்திரைத் திரைவெளியில் நீ
கதவுகள் இன்றி வருவாய்...
கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்...


கனவுகளில் நீயோர் விழிவிழுங்கி!!!
விழுங்கி என்னை புழுங்கச் செய்வாய்...
புருவங்களை வில்களாக்குவாய்...
விழிக் கதிர்களின்
வீரியம் கூட்டிக் கூட்டி அம்புகள் செய்வாய்...
அம்புகளினுடே இறங்கி அகப்பூ அதிர ஆட்டமும் போடுவாய்....


இப்போது தண்டவாலங்களைவிட அதிகமாய் தடதடக்கும் இதயம்!!!!


கனவுகளில் நீயோர் மந்திர பிரம்மம்!
மந்தாட்சம் விளைவித்த மந்தமாருதம் ஊதி
பூவாசனுக்கு பூக்களின் நிறம் சிருஷ்டிப்பாய்...
புவனக்காதலரெல்லாம் தூது பரிமாற
புட்களுக்கெல்லாம் பேசுதிறன் கற்பிப்பாய்...


காதலில் மட்டும் எண்ண அலைகள் கட்டுக்குள் இருக்காது!
கனவுகளில் மட்டும் நிகழ்வதேதும் தொடர்ச்சியாய் இருக்காது!!!


கைகோர்த்து நடப்பாய்...
அடுத்தநொடியில்  இதழ்கள் சேர்த்து மெல்லக் காதலைக் கடப்பாய்...
அற்புதங்கள் நிகழ்த்திவிட்டு என் நித்திரையையும் துரத்திவிடுவாய்...


விடிகையில் அல்லது விழிக்கையில்
இதயம் துடிக்கும் இவ்வாறு என் கண்மணி!


"மீளா துயிலிலும்
உன் கனவு வருமெனில்
இப்போதே நான் தயார்"!!!...


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008075&format=html