Thursday, November 25, 2010

நானிங்கு சுகமில்லை... நீ???





வாய் நிறைத்த இரையோடு
வெறும் கூட்டை வந்துசேரும்
தாய்க்குருவிக்குத் தொற்றிக்கொள்ளும்
பதற்றம் போல் இப்போது 
நீ பிரிந்த எனக்கும்!
நானிங்கு சுகமில்லை... நீ???


கடற்தொலைத்த மோதிரத்தை
அலைமூழ்கி மணலெடுத்து
அது அகப்படும் கைப்பிடிக்காய் 
மூழ்கி மூழ்கிக் கண்சிவப்பது போல் இப்போது
உனை தொலைத்த நானும்!!
நானிங்கு சுகமில்லை... நீ???


உன் கரம் கோர்க்கா பயணங்களில்
நெருஞ்சிமுள் செருப்புகள்!
உன் கைபடா புசித்தலில்
கொடுந்தேளின் விஷம்!!
உன் உரசலில்லா இரவுகளில்
உருக்கிரும்பின் மெய்வருடல்!!!
உன் பாத்திரமில்லா கனவுகளில் 
நிழல் விழா மானுடர்கள்!!!
நானிங்கு சுகமில்லை... நீ???



நினைவிருக்கிறதா தேவி!
என் நடப்பு அகவையின் முதல் நாளில் 
உனக்கென்ன வேண்டும் எனக்கேட்டாய்.
உடனே நான்
இனிவரும் யுகங்கள் முழுக்க
உன் இதழ் பட வாழ்தல் வேண்டுமென்றேன்!
ஒரு கணம் நீ சொக்கிப்போய் 
என் விழி ஊடுருவி சம்மதம் சொல்லிவிட்டு
உடனே தெளிவடைந்தவளாய் வெட்கி 
என் புறங்கையில் மழைபொழிந்துவிட்டு
திருமணம் வரை இசை பட வாழ் என்றாய்!

நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்
உன் சிரிப்பில்லை
உன் அதட்டலில்லை
உன் பரிகாசமில்லை
உன் திட்டலில்லை
உன் உரசலில்லை
உன் எச்சிலில்லை
உனை பிரியும் நேரங்களில்
வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்?


அறிவாய் என் நாயகி!
நீயென் உப்பு!
நீயென் குருதி!
நீயென் நீர்!
நீயென் சத்து!
நீயென் ஊழ்!
உன் பிரிவு எனக்கு அமிலக்குளியல்!!!


தேவி உன் பிரிவில்
தொங்கும் வௌவாலின் 
தலைகீழ் கோணமாய்
மாறிவிட்டதடி என் உலகம்!


சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி 
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ??? 



[கிரியாயூக்கி சிவாஜி சங்கருக்கு(http://sivajisiragukal.blogspot.com/) சமர்ப்பணம்]


Friday, August 27, 2010

ஜல்லிக்கட்டு





தோல்வியெனில்
ஒரு திமிரலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!!


வெற்றியெனில்
திமில் பிடித்தலுக்கும்,
மண்டியிடச்செய்தலுக்கும் அல்லது எல்லைக்கோடு அடைதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் பயணம்
எம் களம்!!!


களமாடிக் களைக்கும்போது
கூட்டத்தின் கூச்சல்கள்
எமக்கு உற்சாகம்...
காளைக்கு மிரட்சி...


வாடிவாசல் புறப்படும்
கொம்பு சீவிய
குடிகார காளையை
வால்பிடித்தோ இல்லை திமில்பிடித்தோ
தூக்கியெறியப்படும் வேளைகளில்
பரணிலிருக்கும் காளைக்காரனின்
வெடிச்சிரிப்பிலும் மீசை முறுக்களிலும்
வெளிப்படும் அவன் வெற்றி...

மாறாக
பற்கள் கடித்தலிலும் கொச்சயாய் ஏசுதலிலும்
வெளிப்படும் எம் வெற்றி...


பாவம் காளைகள்
மீசை முறுக்கலில் அதற்கு வெற்றியுமில்லை...
கொச்சை வார்த்தை ஏசலில் தோல்வியுமில்லை..


இக்கதி முடிவில்
யாம் பெற்ற சன்மானம்
இரண்டாயிரம் ரூபாய்...


கோடித்துணி
வாய்க்கரிசி
மேலும் சில சேர்த்து
எம் மாமன்
எமக்கெனச் செய்த செலவு மூவாயிரம் ரூபாய்...!!!


Monday, August 9, 2010

உன் கனவு வருமெனில்...

*

கனவென்பது யாதெனில்
குவலையம்
என் குழந்தையாகும் நிகழ்வடி என் காதலி!!!....


நிஜங்களுக்கு முரணாய்
நித்திரைத் திரைவெளியில் நீ
கதவுகள் இன்றி வருவாய்...
கண் குறிப்பில் காதல் பொருத்தி வருவாய்...


கனவுகளில் நீயோர் விழிவிழுங்கி!!!
விழுங்கி என்னை புழுங்கச் செய்வாய்...
புருவங்களை வில்களாக்குவாய்...
விழிக் கதிர்களின்
வீரியம் கூட்டிக் கூட்டி அம்புகள் செய்வாய்...
அம்புகளினுடே இறங்கி அகப்பூ அதிர ஆட்டமும் போடுவாய்....


இப்போது தண்டவாலங்களைவிட அதிகமாய் தடதடக்கும் இதயம்!!!!


கனவுகளில் நீயோர் மந்திர பிரம்மம்!
மந்தாட்சம் விளைவித்த மந்தமாருதம் ஊதி
பூவாசனுக்கு பூக்களின் நிறம் சிருஷ்டிப்பாய்...
புவனக்காதலரெல்லாம் தூது பரிமாற
புட்களுக்கெல்லாம் பேசுதிறன் கற்பிப்பாய்...


காதலில் மட்டும் எண்ண அலைகள் கட்டுக்குள் இருக்காது!
கனவுகளில் மட்டும் நிகழ்வதேதும் தொடர்ச்சியாய் இருக்காது!!!


கைகோர்த்து நடப்பாய்...
அடுத்தநொடியில்  இதழ்கள் சேர்த்து மெல்லக் காதலைக் கடப்பாய்...
அற்புதங்கள் நிகழ்த்திவிட்டு என் நித்திரையையும் துரத்திவிடுவாய்...


விடிகையில் அல்லது விழிக்கையில்
இதயம் துடிக்கும் இவ்வாறு என் கண்மணி!


"மீளா துயிலிலும்
உன் கனவு வருமெனில்
இப்போதே நான் தயார்"!!!...


நன்றி திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31008075&format=html

Tuesday, June 1, 2010

கவிதைக் காரணங்கள்...

ஊடலின் வெப்பமும்
உள் விளைந்த
தனிமையின் மொத்தமும்
அன்றைய மழைக்காரணங்கள்...


வழக்கமாய்
ச்சோ! எனப் பெய்யும் மழை
அச்சச்சோ! எனப் பெய்வதாகவும்...


தழைகளினூடே
துளிகளைச் சிந்தி
தருக்கள் அழுவதாகவும்...


அதனினூடே
அவைகள்
அனுதாபிப்பதாகவும்
ஆறுதல் பட்டது மனது!!!


தேவ தேவி!
நின்
நினைப்பில் நனைவதைப்போலவே தொப்பலாய்
நனைந்துவிட்டேன் மழையிலும்...


குடைபிடித்து வானம் வருமா???
வரும்!!!
வந்தாய் நீ!!!


முற்றிலும் நனைந்த போதும்
இப்போது உன் குடை தேடியது மனது!!!


சூரியன் வருவதை
விரும்பாதிருக்காது வானம்...
ஏனோ
அம்முறை விரும்பவில்லை நீ!!!
ஆயினும்
வந்தே தீரும் சூரியன்!!!


குடைக்குள் நாம்!!!


அடுத்தடுத்த
உரசல்களில் உருவான
மின்சாரப் பாய்ச்சலில் நீயும்...
இதுவும்
ஊடல் விளைவிக்குமோ! என்ற
ஐயத்தில் நானும்...


பதைபதைத்துக்கொண்டே
பயணம் நீண்டது...


மகிழ்வுந்தோன்று தேரில் சேர் தெளித்ததும்
காற்று குடை கவர்ந்ததும்
மழை உன்னை திருமுழுக்கிட்டதும்
மின்னல் நம்மை பிணைத்திட்டதும்
உடனே ஊடல் விரட்டப்பட்டதும்
இக்கவிதை காரணங்கள்...




நன்றி யூத்புல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayaseelanpoem040610.asp




Saturday, May 29, 2010

இப்போதே கேட்டுவிடு...

என் பின்னே சுற்றுவது ஏனென்று



இப்போதே கேட்டுவிடு...


தாமதிக்க தாமதிக்க


என்னிடம்


காரணங்கள் அதிகமாகிவிடக்கூடும்...
 
 



எறும்புகளிடம் சொல்லிவை!!!

எறும்புகளிடம் சொல்லிவை!



உன்


தாவணியோடு நிறுத்திக்கொள்ள...


மீறி


உன் திருமேனியில் ஊடுருவினால்


அது எல்லை தாண்டிய பயங்கரவாதம்...


போர் தொடுக்க நேரிடும்!!!






Sunday, May 23, 2010

அதன்பேர் காதலும்தான்...

கத்தியின்றி


ரத்தமின்றி


யுத்தமொன்று நடந்தால்


அதன்பேர் அகிம்சைமட்டுமல்ல


காதலும்தான்...

Saturday, May 22, 2010

தீனி...

நீ


ஒருமுறை பார்த்ததினால் வந்தக் காதலுக்கு


உன்னை


தினசரிப் பார்பதே தீனியாகிப்போனது....

Thursday, May 20, 2010

புன்னகைசெய்யேன்...

நீ


உருட்டும் விழிகளைப் பார்த்து


ஒரு யுகத்திற்கான கவிகள் எதுதிமுடித்தாயிற்று


மாற்றம் தேவைபடுகிறது


ஒரேயொரு புன்னகைசெய்யேன்...

Tuesday, May 18, 2010

பூந்தோட்டம்

என்னைவிடு!


பேருந்து கூட


கவிஎழுதிவிட்டது


உன்னைப்பற்றி...


நீ


வழக்கமாய் அமரும்


இருக்கைக்குமேல்


பூந்தோட்டம் எனும் ஊர்ப்பெயர்....

Monday, May 10, 2010

அலுவலகம் போயாச்சு...

வெளிக்கதவுகளுக்குள்


வாலாட்டித் திரியும்


செல்ல நாய்க்குட்டி


உள்கதவுகளுக்குள்


அடைக்கப்பட்டிருக்கும்


சிறுவனுக்குத்


தந்த


உணர்வு


பொறாமையாகக்கூட இருக்கலாம்...

Thursday, May 6, 2010

புரிதலின் பொருள்


வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி....


என்னடா அர்த்தம்???


காதல்டா என்றான் நண்பன்...


புன்னகைத்துக்கொண்டே


பசி என்றான்


நிஜ பிச்சைக்காரன்...

Friday, April 16, 2010

அடியே!- சில கேள்விகள்....

அடியே!


நீ


சமையற்குறிப்பு


நிகழ்ச்சியைத்தான்


தொகுத்து வழங்குகிறாய்...


நேயர் அனைவரும்


அழகுக்குறிப்பு எடுக்கிறார்கள் என்பது


உனக்கு


தெரியுமா


தெரியாதா???






******************************


******************************






அடியே!


இப்போதெல்லாம்


நீ


உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு


இதழ் மறைக்கிறாயாமே...


அந்த


தேனியும்,


வண்ணத்துப்பூச்சியும்


புலம்புவது


மெய்யா???






******************************


******************************






அடியே!


நீ


ஊஞ்சல் கட்டி


ஆடியதும்


அம்மரம்


பூப்படைந்துவிட்டதாமே!!!


என்ன செய்தாய்???






******************************


******************************



அடியே!


மருதாணியிடச் சொல்லிவிட்டு


விரல் பிடித்ததுமே


சிவந்துபோனால் எப்படி???






Wednesday, March 31, 2010

மந்திரக்கள்ளி...




பாறையின்


சித்திரங்களை


திரையிட்டிருக்கும்


நீர் வேலி


அருவி!!!






ஆழ்மனதின்


காதலை


மறைத்திருக்கும்


மந்திரக்கள்ளி


நீ!!!

களவு



ஆத்துமணலின்


அக்கரையில் பள்ளிக்கூடம்.


கணக்குப் பாடம் பழக


வழி நெடுக பலாமரம்...






அதென்னமோ


அந்த வயசுல


அறுசுவையும்


பலாச்சுவைதான்...






வேலிசாஞ்சி


எட்டிக் கைதூக்கி


பலாக்காயை தொட்டிருக்கோம்.


காவக்காரன் பாத்துட்டான்னா


பிரம்பு மொழி கேட்டிருக்கோம்...






மொதலாளி தந்த பாய் பயத்தவிட


இருள் தந்த பேய் பயத்தால


காவக்காரன் தூங்கிட்டான்.


களவாட துணிஞ்சிட்டோம்...






ஒன்னு பத்தாதுன்னு


நாலு பறிச்சோம்.


காயை கனியாக்க


ஆத்து மணலுல புதைச்சோம்...






காலையில


கையில கம்போட


காவக்காரன்


கெட்ட கெட்ட வார்த்தையில திட்டிகிட்டு இருந்தான்.






மனசுக்குள்ள நாங்களும்


திட்டிகிட்டுதான் இருந்தோம்.


ஆத்துமணல களவாடின-அந்த


கெட்ட கெட்ட வார்த்தைக்குரியவன நெனச்சு......








Tuesday, March 23, 2010

எப்படிச்சொல்வேன்....

சுற்றத்தாரின் தொடர்புகளையும்...
நண்பர்களின் நல விசாரிப்புகளையும்...
கடன் வாங்கிய விவரங்களையும்...
"வேலைக்கு ஆட்கள் தேவை'' பலகை மாட்டியிருக்கும்
கதவுகளின் முகவரிகளையும்...
என்னைப் போலவே
வேலை தேட
நாளை வரும் என் தம்பி,
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகும்
நான் வசிக்கும்
சென்னையின் சந்துகளை அறியாதவனாய்,
"நீயே வந்தெனை அழைத்துக்கொள்!" என்று
ஆயிரம் முறை
அனுப்பிய செய்திகளையும்...
சேமித்துவைத்திருந்த என் கைபேசியை
களவாடியவனிடம்
எப்படிச்சொல்வேன்-அது
இறந்துபோன என் அப்பா-எனக்கு
இறுதியாய் வாங்கிக்கொடுத்ததென்று!!!

Monday, March 15, 2010

அழகாயிருக்கிறாய்....



மன்றாடிக்கேட்கிறேன் உன்னை
முன்னிரவில் மொட்டைமாடியில் நிற்காதே....
கீழிருந்து பார்க்கும்போது
எது நீ, எது நிலவு என்று குழப்பமாய் இருக்கிறது எனக்கு......



******************************************
******************************************

 


என்னவள்
அழகிப்போட்டியில் பங்கேற்கிறாள்....
போட்டி போட
பூமியில் யாருமில்லை....
நிச்சயம் தோற்றுதான் போவாய்
பரவாயில்லை நிலவே!
பங்கேற்புச் சான்றிதழ் கிடைக்கும்
கீழிறங்கி வா!!!





*******************************************
*******************************************



நிலா
தான்
அழகென்பதை உறுதிசெய்ய
உன்னை உவமையாக கேட்கிறது......


********************************************
********************************************



நிலவுக்கு
தேய்பிறையும் வளர்பிறையும் எதனால் தெரியுமா?
நீ
கர்பத்தில் இருந்தவரை
நிலா
தான் தான் அழகென்ற கர்வத்தில் இருந்தது.
அதனால்தான்
கவலையில் இளைத்தலும்
உன்னை வென்றேதீரவேண்டுமென்று
மறுபடி மறுபடி தடித்தலும்
அதன் குலத்தொழில் ஆனது...


*******************************************
*******************************************
  
 



மின்னலாய் உன் பார்வை...
அது மின்னலென்பதாலோ என்னவோ
ஒரு நொடிக்குமேல் நீடிக்கவேயில்லை...


********************************************
********************************************



நல்லவேளை
பூமி ஒரு பெண்ணென்பதால்
மரம், செடி கொடியெல்லாம் வளர்க்கிறது....
இதுவே ஆணாக இருந்திருந்தால்
நீ பூமிபார்த்து நடக்கும்போது உன்னைப்பார்த்துக்
காதல் அல்லவா வளர்த்திருக்கும்......


*********************************************
*********************************************



நேற்றும் உனதானது இரவு...
புரியலையா???
என் கனவில் நீ வந்தாய் என்பதைச் சொன்னேன்....
என் உடை அழகாக இருக்கிறதா என்று கேட்கிறாய்....
இல்லை என்கிறேன்
உடனே கோபம் கொள்கிறாய்....
ஏ... அழகுப்பிசாசே!
நான் இன்னும் முடிக்கவில்லை
நீ அதைவிட
அழகாயிருக்கிறாய் என்றவுடன் உதடுகடிக்கிறாய்....
கண்விழித்தேன்
கட்டிலுக்கு எதிரே
புன்னகைக்கிறாய்
புகைப்படமாய்........


**********************************************
**********************************************



காதல்!
கற்பனை வாழ்வில் புன்னகைத்துவிட்டு,
நிஜவாழ்க்கையில் ஓலமிட்டு அழுகிறது.....

***********************************************
***********************************************