Thursday, November 25, 2010

நானிங்கு சுகமில்லை... நீ???





வாய் நிறைத்த இரையோடு
வெறும் கூட்டை வந்துசேரும்
தாய்க்குருவிக்குத் தொற்றிக்கொள்ளும்
பதற்றம் போல் இப்போது 
நீ பிரிந்த எனக்கும்!
நானிங்கு சுகமில்லை... நீ???


கடற்தொலைத்த மோதிரத்தை
அலைமூழ்கி மணலெடுத்து
அது அகப்படும் கைப்பிடிக்காய் 
மூழ்கி மூழ்கிக் கண்சிவப்பது போல் இப்போது
உனை தொலைத்த நானும்!!
நானிங்கு சுகமில்லை... நீ???


உன் கரம் கோர்க்கா பயணங்களில்
நெருஞ்சிமுள் செருப்புகள்!
உன் கைபடா புசித்தலில்
கொடுந்தேளின் விஷம்!!
உன் உரசலில்லா இரவுகளில்
உருக்கிரும்பின் மெய்வருடல்!!!
உன் பாத்திரமில்லா கனவுகளில் 
நிழல் விழா மானுடர்கள்!!!
நானிங்கு சுகமில்லை... நீ???



நினைவிருக்கிறதா தேவி!
என் நடப்பு அகவையின் முதல் நாளில் 
உனக்கென்ன வேண்டும் எனக்கேட்டாய்.
உடனே நான்
இனிவரும் யுகங்கள் முழுக்க
உன் இதழ் பட வாழ்தல் வேண்டுமென்றேன்!
ஒரு கணம் நீ சொக்கிப்போய் 
என் விழி ஊடுருவி சம்மதம் சொல்லிவிட்டு
உடனே தெளிவடைந்தவளாய் வெட்கி 
என் புறங்கையில் மழைபொழிந்துவிட்டு
திருமணம் வரை இசை பட வாழ் என்றாய்!

நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்
உன் சிரிப்பில்லை
உன் அதட்டலில்லை
உன் பரிகாசமில்லை
உன் திட்டலில்லை
உன் உரசலில்லை
உன் எச்சிலில்லை
உனை பிரியும் நேரங்களில்
வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்?


அறிவாய் என் நாயகி!
நீயென் உப்பு!
நீயென் குருதி!
நீயென் நீர்!
நீயென் சத்து!
நீயென் ஊழ்!
உன் பிரிவு எனக்கு அமிலக்குளியல்!!!


தேவி உன் பிரிவில்
தொங்கும் வௌவாலின் 
தலைகீழ் கோணமாய்
மாறிவிட்டதடி என் உலகம்!


சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி 
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ??? 



[கிரியாயூக்கி சிவாஜி சங்கருக்கு(http://sivajisiragukal.blogspot.com/) சமர்ப்பணம்]