Friday, March 11, 2011

ஒரு வியாபாரியும் அவரின் பெருமூச்சும்


நரைத்திருந்த தாடியிலும்
நலங்கெட்டக் கண்களிலும்
இளைத்தக் கன்னங்களிலும்
லேசாய் பருத்து
லேசாய் வளைந்திருந்த முதுகிலும்
வண்டியிழுக்கையில் வெளிப்படும்
வைக்கோல் நரம்புகளிலும்
ஒட்டியிருந்தது அவரின் முதுமை...


கிளம்பிவிட்ட பேருந்தின்
ஒரு ஜன்னலுக்கு
திடிரென முளைத்திருந்த
கரத்தினைக் கண்டதும்,


தனை விடுத்து எங்கோ செல்லும்
தாயின்பின்னோடும் மழலையைப் போல

கூம்புக் காகிதத்தில் 
சுவைபொருள் நிரப்பி
கால்களில் இளமை சுரந்து

அவசரமெடுத்து
ஜன்னல் அடைந்து
பண்டம் கொடுத்து
அவ்வேகத்தில் பேரமும் கடந்து
கிடைத்ததை அடைந்து
கல்லாவில் போட்டதும்
அவரிடமிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு என்னிடம் சொன்னது...


அவருக்குச் சாதிக்காத
ஒரு மகனிருக்கிறான் என்று!


இல்லையில்லை


சாதித்த மகன்
கைவிட்டுவிட்டான் என்று!


இல்லையில்லை

அவருக்கு திருமண
வயதில் ஒரு மகளிருக்கிறாள் என்று!

இல்லையில்லை

அவரின் மகளின் குழந்தைக்கு
ஒரு பொம்மை பரிசளிக்க என்று!

இல்லையில்லை

அவரின் மனைவிக்கு 
அடுத்தநாள் பண்டிகைக்கு
ஒரு புடவை வாங்கித்தர என்று!


இல்லையில்லை


இறந்துவிட்ட மனைவியின் படத்திற்கு 
ஒரு சந்தன மாலை அணிவிப்பதற்கு என்று!

இல்லையில்லை

அவர் யாருக்கும் 
அடிமையாக இருக்கவில்லை என்று!


இல்லையில்லை


அவர் யாரன்பிற்கோ
அடிமையாக இருக்கிறார் என்று!


இல்லையில்லை

அவருக்கு அன்றிரவின்
சாராயத்திற்குப் பணமில்லை என்று!


இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!!
அதுகணம் எனை நோக்கிய
அவரின் தீர்க்கமானப் பார்வை சொன்னது
அவருக்கு அதுதான் தொழில் என்று!!!